நாகப்பட்டினம்-அம்பல் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர சுவாமி ஆலயம் | Ambal Sri Brammapureeswara Swamy Temple
நாகப்பட்டினம் | அம்பல் | ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர சுவாமி ஆலயம் | வழிபாடு #9 | திருவையாறு
Nagapattinam | Ambal | Sri Brammapureeswara Swamy Temple | Vazhipadu #9 | Thiruvaiyaru
தேதி : 25.11.2024
நடை திறக்கப்படும் நேரம் :
காலை : காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை : மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
#திருவையாறு #thiruvaiyaru #vazhipadu #வழிபாடு #Nagapattinam #நாகப்பட்டினம் #Ambal #அம்பல் #பிரம்மபுரீஸ்வரசுவாமி #Brammapureeswaraswamy#vazhipadu9 #வழிபாடு #9
Google Map Location : https://maps.app.goo.gl/E9mwPkWdbhvfS7WX9
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பல் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர சுவாமி ஆலயம். இவ்வாலயத்தை பற்றிய முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.
இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் கொத்தவாசல் என்ற ஊரின் அருகில் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ரயிலில் வருபவர்கள் பூந்தோட்டம் ரயில் நிலையத்தில் இறங்கி வந்தடையலாம்.
ஏறக்குறைய 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதை குறிப்பிடும் வகையில் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன், நந்தராசன் காலத்து கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றது. சோழ நாட்டு திருத்தலங்களில் மேன்மை பெற்றதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புடையதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்று, தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 54 வது தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.
கோச்சங்கட் சோழனால் திருப்பணி செய்யப்பட்டது இந்த நைமிசாரண்யம். நைமிசாரண்யம் என்றால் இறைவன் தானாக அவதரித்த தலம் என்பது பொருளாகும் இங்கு இறைவன் வனசுவருபியாக விளங்குகின்றார். இங்குள்ள மரங்கள், செடிகள், தீர்த்தங்கள், கொடிகள் அனைத்துமே ஸ்ரீமத் நாராயணனின் அம்சமாகவே கிரேதா யுகத்தில் இருந்து பூஜிக்கப்பட்டு வருகின்றது. தற்போது இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முன்பொரு காலத்தில் துர்வாச முனிவர் இத்தல இறைவனை வழிபட ஆகாய மார்க்கமாக வந்து கொண்டிருந்த பொழுது அசுர குல மங்கையான மதலோலை என்ற மங்கை தனக்கு மகப்பேறு அருள வேண்டினாள். இதனால் கோபமுற்ற துர்வாச முனிவர் “தீவினைகளையே விரும்பிச் செய்யும் இரு புதல்வர்களை பெறுவாய்” என்று சாபம் அளிக்கிறார். முனிவரின் சாபத்தினால் அந்த மங்கை இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். அக்குழந்தைகளுக்கு அம்பரன், அம்பன் என்று பெயர் சூட்டுகிறாள். பின்னர் அசுரர் உருவான குருவான சுக்கிரனின் அறிவுரைப்படி, அவ்விருவரும் இத்தல இறைவனை பூஜித்து அளவற்ற பலத்தினை பெற்றனர். இதன் விளைவாக இவர்களின் ஆணவம் தலைக்கேறி தேவர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் விளைவித்தனர். இவர்களின் கொடுமை தாங்காது ஈசனிடம் முறையிட்ட பொழுது ஈசன், தன் இடப்பாகத்தில் இருந்த தேவியை பார்க்க, அம்பிகை காளி ரூபத்தில் சென்று அவ்விருவரையும் வதம் செய்கிறார். பல கொடுமைகள் செய்திருந்தாலும் ஈசனை பக்தியுடன் பூஜித்த காரணத்தினால் “இத்தலம் தங்களின் பெயராலேயே விளங்க வேண்டும் என்றும், இறைவனின் திருநாமமும் தங்களின் பேரிலேயே விளங்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டதால், அன்று முதல் இத்தலம் அம்பலராபுரம் என்றும் இறைவனின் திருநாமம் அம்பரீசன் என்றும் ஆயிற்று. காலப்போக்கில் அம்பர் என்று தற்போது அம்பல் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மன் சிவபெருமானின் முடியை காண அன்னமாக சென்று காணாமலேயே கண்டதாக பொய்யுரை கூறியதால், சிவபெருமான் பிரம்மனை அன்னமாகும் படி சபித்து விடுகிறார். அச்சாபம் நீங்க பிரம்மன் புன்னாக வனமாக அமைந்திருந்த இத்தலத்திற்கு வந்து, இத்தலத்தில் பொய்கை ஒன்றை உருவாக்கி, இறைவனை அபிஷேகம் செய்து பூஜித்ததால், தன்னுடைய சாபம் நீங்க பெற்றார். பிரம்மனுக்கு அருள் புரிந்ததால் இவ்வாலயத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். பிரம்மன் அன்ன ரூபத்தில் உருவாக்கிய பொய்கையானது இத்தலத்தின் தீர்த்தம் அன்னமாம் பொய்கை தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.
இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியுடன் சுயம்பு மூர்த்தியாக பிரம்மபுரீஸ்வரர் காட்சியளிக்கிறார். அவருக்கு பின்னால் அம்மையப்பன் வீற்று இருப்பது அற்புதம். இவ்வாலயத்தின் மற்ற சிறப்புகளாக விசுவாமித்திரரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க மன்மதன் இத்தலத்தை இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றார். மேலும் விமலன் என்ற காசி நகர அந்தணர் இவ்வாலயத்தின் தீர்த்தத்தில் நீராடி அம்பரீசனை வழிபட்டு புத்திரப்பேறு பெற்றார்.
இவ்வாலயத்தின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரமும், சித்திரை மாதம் கோடபிஷேக விழாவும், ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேக விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, நவராத்திரி விழா, திருக்கார்த்திகை தீபம், சிவராத்திரி விழா, பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுகின்றது. மாதம்தோறும் பிரதோஷ தினத்தன்று இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது
இக்கோவில் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்!