Videos

திருவாரூர் – கூத்தனூர் ஸ்ரீ மகா சரஸ்வதி ஆலயம் | Koothanur Sri Maha Saraswathi Temple Temple

திருவாரூர் | கூத்தனூர் | ஸ்ரீ மகா சரஸ்வதி ஆலயம் | வழிபாடு #10 | திருவையாறு

Thiruvarur | Koothanur | Sri Maha Saraswathi Temple | Vazhipadu #10 | Thiruvaiyaru

தேதி : 02.12.2024

நடை திறக்கப்படும் நேரம் :

காலை : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும்,
மாலை : மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

#திருவையாறு #thiruvaiyaru #vazhipadu #வழிபாடு #thiruvarur #திருவாரூர் #koothanur #கூத்தனூர் #சரஸ்வதி #saraswathi #vazhipadu10 #வழிபாடு #10

Google Map Location : https://maps.app.goo.gl/qM5NPCnhHAPwk9Zd7

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாட்டு நிகழ்ச்சியில் நாம் செல்லப்போகும் ஆலயம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் ஒரே சரஸ்வதி ஆலயம் – கூத்தனூர் ஸ்ரீ மகா சரஸ்வதி ஆலயம்! இந்த ஆலயத்தின் சுவாரஸ்யமான வரலாறு மற்றும் ஆச்சர்யங்கள் பற்றிய முழு தகவல்களை அறிய காணொளியை முழுமையாக காணுங்கள்.

இக்கோவில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் மயிலாடுதுறையிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவாரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் 36 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இவ்வாலயம்.

இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதற்குச் சான்றாக இவ்வாலயத்தில் பழங்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தற்சமயம் இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

முன்னொரு காலத்தில் அம்பாபுரி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் விக்ரம சோழனின் பேரனாகிய இரண்டாம் ராஜராஜ சோழன், தனது அவை புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஒட்டக்கூத்தர் இவ்வூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரசலாறு என்று வட்டார வழக்கில் அழைக்கப்படுகின்ற அரிசொல் மாநதியின் நீரால் தினமும் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். மேலும் இந்த அரசலாற்றில், கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் ஒன்றாகக் கலப்பதாக நம்பபடுகிறது. ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். இதனால் இவ்வூர் கூத்தன் + ஊர் கூத்தனூர் என்று பெயர் பெற்றது. ஒட்டக்கூத்தர் தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரசுவதியை “ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய” என்று பரணி பாடியுள்ளார். ஒட்டக்கூத்தர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்று மூன்று சோழ மன்னர்களின் அரசவைப் புலவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில் பிரம்மதேவரும், சரஸ்வதி தேவியும் சத்தியலோகத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி தேவிக்கு, ‘எல்லோருக்கும் கல்வியும் ஞானமும் வழங்கும் தானே உயர்ந்தவள்’ என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. சரஸ்வதியின் எண்ணம் தெரிந்த பிரம்மதேவர் படைப்புத் தொழில் செய்வதால் தானே பெரியவன் என்று வாதிட்டார். முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி – சோபனை ஆகியோருக்கு முறையே பகுகாந்தன், சிரத்தை என்ற குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் திருமண வயதை அடைந்தனர். பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனைத் தேடினர். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்ற விவரம் தெரிய வந்தது. ஆனால், ஒரு தாயின் குழந்தைகளாகப் பிறந்து, சகோதர முறையில் இருப்பதால், திருமணம் செய்துகொண்டு ஊராரின் கேலிக்கு ஆளாக விரும்பவில்லை. எனவே, இருவரும் சிவபெருமானைப் பணிந்து வணங்கி, தங்களின் இக்கட்டான நிலையைக் கூறினர். இந்த தர்மசங்கடத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று ஆலோசனையும் கேட்டனர். ஆனால், ”சகோதர முறையில் உள்ள நீங்கள் திருமணம் செய்துகொள்வது முறையில்லை. சரஸ்வதி மட்டும் இங்கே கன்னியாக இருந்து, வழிபடும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கட்டும் என்று கூறி மறைந்தார். அதன்படி சரஸ்வதி தேவி இங்கே கன்னி சரஸ்வதியாக கோயில் கொண்டுள்ளாள்.

அதன் அடிப்படையில் இக்கோவிலின் முக்கிய பிரார்த்தனையாக இங்கு வந்து வழிபடும் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வளத்தை சரஸ்வதி தேவி வழங்குகிறார் என்பது நம்பிக்கை. எனவே குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் தங்களுடைய தேர்வுக்கு சில நாட்களுக்கு முன் அல்லது பள்ளி தொடங்கும் முதல் நாளில் இங்கு வந்து பேனா, பென்சில், நோட்டு புத்தகம் ஆகியவை சரஸ்வதி தேவியிடம் வைத்து படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவதை இன்றளவும் வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக கோவிலின் வாசலில் அமைந்துள்ள கடைகளில் அர்ச்சனை பொருட்கள், தேங்காய், பழம், மாலை முதலியவை விற்பனை செய்வது வழக்கம். அதற்கு மாற்றாக இக்கோவிலில் அர்ச்சனை பொருட்களுடன் சேர்த்து கல்வி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் அதாவது பேனா, பென்சில், நோட்டு புத்தகம் முதலிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் விஜயதசமி நாளன்று இங்கு குழந்தைகளுக்கு வித்யா ஆரம்பம் என்கின்ற குழந்தைகளுக்கு நெல் மணியில் அச்சரம் எழுதுகின்றனர், இதனால் அக்குழந்தையின் கல்வி வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

இவ்வாலயத்தில் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் வசந்த நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் மாதம் தோறும் சரஸ்வதி தேவியின் ஜென்ம நட்சத்திரம் ஆன மூல நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெறுகின்றது

இக்கோவில் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து சரஸ்வதி தேவியை வணங்கி அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம்

Related Articles

Back to top button
Close