Videos

Madhurai Chiththrai thiruvizha Kallazhakar Vaigai Attril Elunthrulinar

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.#திருவையாறு #அறம்வளர்த்தநாயகி #தர்மசமவர்தினி #

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்தோடு அருள்மிகு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 21-ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருமாலிருஞ்சோலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரை புறப்பாடானார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதில், சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடிக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தார்.

அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியபோது, திருவில்லிப்புத்தூரிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளின் திருமாலையைச்சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோவிலின் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார். அங்கு அருள்மிகு வீரராகவப் பெருமாளுக்கு கள்ளழகர் மாலை சாத்தும் வைபவம் நடைபெற்றது. வைகையாற்றுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ‘கோவிந்தா’ முழக்கத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். பெண்கள் சர்க்கரை தீபம் காட்டினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநகர காவல்துறையின் சார்பாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியின் சார்பாக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளும், நடமாடும் கழிப்பறை வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அழகர்கோவில் தொடங்கி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில் வரை சற்றேறக்குறைய 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் இருமார்க்கத்திலும் கள்ளழகர் எழுந்தருள்கிறார். வைகையாற்றிலிருந்து புறப்பட்டுச் செல்லும் கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் பிற்பகல் 12 மணியளவில் பக்தர்களால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
Close