Thiruvaiyaru

தஞ்சாவூர்-புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம் | Punnainallur Sri Kothandaramar Temple | வழிபாடு#8

தஞ்சாவூர் | புன்னைநல்லூர் | ஸ்ரீ சீதா லக்ஷ்மண, சுக்ரீவர் அனுமத் சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயம் | வழிபாடு #8 | திருவையாறு

Thanjavur | Punnainallur | Sri Kothandaramar Temple | Vazhipadu #8 | Thiruvaiyaru

தேதி : 18.11.2024

நடை திறக்கப்படும் நேரம் :

காலை : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும்,
மாலை : மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

#திருவையாறு #thiruvaiyaru #vazhipadu #வழிபாடு #thanjavur #தஞ்சாவூர் #punnainallur #புன்னைநல்லூர் #கோதண்டராமர் #kothandaramar #vazhipadu8 #வழிபாடு #8

Google Map Location : https://maps.app.goo.gl/Gyac4WZwYPR2vBba8

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் ஸ்ரீ சீதா லக்ஷ்மண, சுக்ரீவர் அனுமத் சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயம். இவ்வாலயத்தை பற்றிய முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.

இக்கோவில் தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் புகழ் பெற்ற புன்னைநல்லூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அருகில் வடக்கே 1/2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

கிபி பதினெட்டாம் நூற்றாண்டில், மராட்டிய மன்னர் பிரதாப சிங் மகாராஜா என்பவரால் கட்டப்பட்ட இக்கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மேலும் இக்கோவிலுக்கு மராட்டிய மன்னர் சிவாஜி மற்றும் காமாட்சி அம்பா பாய் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாமணி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ நீலமேகப் பெருமாளின் அபிமான ஸ்தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. தற்சமயம் இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களில் ஒன்றாகும்.

5 நிலை ராஜகோபுரத்துடன் அமைக்கப்பெற்ற இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதன் அருகில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பிரகார மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவற்றில் ஸ்ரீ ராமபிரானின் வரலாறு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளதை காணலாம்.

பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது மூலவர் சன்னதியின் வலது புறத்தில் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் நின்ற காலத்தில் வலது கை உயர்த்தியபடியும் இடது கையில் தாமரை மலருடன் தெற்கு நோக்கிய முகமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இச்சன்னதியில் எழுந்தருளியுள்ள உற்சவர் ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேதராக ஸ்ரீ ராமர் சிலைகள் சுமார் 1400 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உற்சவர் சிலைகள் ஆனது இக்கோவிலில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், பூவனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாலயத்தின் மூலவராக ஸ்ரீ சீதாப்பிராட்டி, ஸ்ரீ லட்சுமணர், ஸ்ரீ சுக்ரீவர் சமேதராக ஸ்ரீ கோதண்ட ராமர் காட்சியளிக்கிறார். பொதுவாக ராமர் ஆலயங்களில் ஆஞ்சநேயர் அமைக்கப்படுவது வழக்கம், அதற்கு மாறாக இவ்வாலயத்தில் வானர தலைவரான ஸ்ரீ சுக்ரீவன் அமைந்துள்ளது இங்குள்ள சிறப்பாகும். ஶ்ரீ ராமர், ஸ்ரீ சீதாப்பிராட்டியை கண்டுபிடிக்க ஶ்ரீ சுக்ரீவரின் உதவியை அங்கீகரிப்பதற்காகவே, ஶ்ரீ சுக்ரீவன் தன் அருகில் இருக்க விரும்பினார் என்று நம்பப்படுகிறது.

இங்குள்ள மற்றொரு சிறப்பாக இவ்வாலயத்தின் மூலவர் நேபாளத்தில் கண்டகி நதியில் மட்டுமே கிடைக்கும் சாளக்கிராமம் என்கின்ற சிறப்பு மிகுந்த கல்லினால் வடிவமைக்கப்பட்டவர் என்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த சாளக்கிராம கல் ஆனது மிகவும் சிறிய அளவிலேயே கிடைக்கும் ஆனால் இக்கோவிலில் ஆறு அடி உயரத்தில் சிலைகள் இக்கல்லினால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவிலேயே சாளக்கிராம கல்லினால் அமைக்கப்பட்ட சிலை உள்ள கோவில் இது ஒன்றே ஆகும். முந்தைய காலத்தில் திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டாருக்கு சம்பந்தி துளசி மாடம் மற்றும் சாளக்கிராம கல்லை அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இக்கோவிலை கட்டிய பிரதாப சிங்க மகாராஜாவுக்கு தன்னுடைய மாமனாரான நேபாள மன்னர் அன்பளிப்பாக கொடுத்த சாளக்கிராமக் கல்லினை கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகள் தான் இவ்வாலயத்தின் மூலவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலின் அருகில் கல்வி வளம் அருளும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள முலவர் சாளக்கிராமம் கல்லினால் அமைந்துள்ளதால் அவரை வழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது போன்ற அமைப்பு நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முக்திநாதர் ஆலயத்தில் மட்டுமே உள்ளது. அதனால் இவ்வாலயத்தை தென்னகத்தின் முக்திநாத் என்று அழைக்கின்றனர். மேலும் இவ்வாலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியின் மேற்கூரையில் 12 ராசிகளுக்கான கட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அவரவர் ராசிக்கு நேராக உள்ள கட்டத்தில் நின்று இறைவனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் இங்குள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

இவ்வாலயத்தின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி உற்சவம் மற்றும் பங்குனி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றது.

இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்!

Exit mobile version