தஞ்சாவூர் | தெற்கு ராஜவீதி | ஶ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள் ஆலயம் | வழிபாடு | திருவையாறு
Thanjavur | Therku Rajavethi | Sri Kaliyuga Venkatesa Perumal Temple | Vazhipadu | Thiruvaiyaru
தேதி : 30.09.2024
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு ராஜவீதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி ஶ்ரீபூமிதேவி சமேத ஶ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள் ஆலயம்.இவ்வாலயம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் & இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக்கோவில். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் மராட்டிய மன்னர்கள் காலத்தில் சுல்தான் ஜி அப்பா என்ற படைத்தளபதியால் கட்டப்பட்ட கோவிலாகும்.கோவிலின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம் கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் இடது புறத்தில் நவகிரகங்கள் அமைக்கப்பெற்று ஶ்ரீ சூரிய பகவான் தாயாரோடு அமர்ந்து பெருமாளை தரிசிப்பது போன்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இத்திருக்கோவிலில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகம். கோவிலின் பிரகாரத்தில் ஸ்தலவிருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது.இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பாக அமர்ந்த கோலத்தில் மகாலட்சுமியும் சதுர் புஜ வரதராஜரும் காட்சி தருகின்றார்.
மாத்வ குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1008 ஆஞ்சநேயர்களுள் ஒன்றாக ஶ்ரீ பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் இங்கு அமைக்க பெற்றுள்ளது சிறப்பாகும். ஒரு கையில் கடி மலரும் மற்றொரு கையினால் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் படி அபயஹஸ்தராக காட்சி தருகின்றார் ஆஞ்சநேயர்.
இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் என்பது மற்றொரு சிறப்பாகும். அதாவது அனைத்து வைணவ தலங்களிலும் சொர்க்கவாசல் என்பது வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்பட்டு, அதன் வழியாக உள்ளே சென்று பெருமாளை வழிபடுவது வழக்கம். அதற்கு மாறாக இக்கோவிலில் வருடம் 365 நாட்களும் சொர்க்கவாசல் திறந்தே இருக்கும், அதன் வழியாக உள்ளே சென்று மூலவரை தரிசனம் செய்யலாம். பிரகாரத்தை சுற்றி மூலவரை வழிபட செல்லும் பொழுது விநாயகர், நாகராஜர் மற்றும் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகின்ற கருடாழ்வாரை தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தின் மூலவர் ஸ்ரீதேவி ஸ்ரீ பூமி தேவி சமேத ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள் சதுர் புஜ கோலத்தில் கடிகஸ்தம், வரதகஸ்தம், சங்கு சக்கரத்துடன் காட்சி தருகின்றார். இத்திருக்கோவிலை 12 முறை சுற்றி வந்து நல்லெண்ணெய் தீபம் இட்டு வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் விருத்தி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகின்றது. வருடத்தில் ஒரு நாள் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்ற 24 கருட சேவை விழாவில் இவ்வாலய உற்சவ பெருமாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று நித்திய சொர்க்கவாசலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் காட்சி தருகின்றார்.
இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டு பெருமாளின் அருளை பெறும்படி வேண்டிக்கொள்கிறோம். மீண்டும் ஒரு ஆலய வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்.