கும்பகோணம் | ஏரகரம் | ஶ்ரீ கந்தநாத சுவாமி ஆலயம் | வழிபாடு #5 | திருவையாறு
Kumbakonam | Eraharam | Sri KandhanathaSwamy Temple | Vazhipadu #5 | Thiruvaiyaru
தேதி : 28.10.2024
நடை திறக்கப்படும் நேரம் :
காலை : 7.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை : 4.30 மணி முதல் 7.30 மணி வரை
#thiruvaiyaru #Kumbakonam #Eraharam #KandhanathaSwamy #vazhipadu5 #5 #திருவையாறு #வழிபாடு #கும்பகோணம் #ஏரகரம் #கந்தநாதசுவாமி #வழிபாடு5 #5
Google Map Location : https://maps.app.goo.gl/4ztBD2qvJRoJVHEC9
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஏரகரம் ஸ்ரீ சங்கர நாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ கந்தநாத சுவாமி ஆலயம். இவ்வாலயத்தை பற்றிய முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.
இக்கோவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலை மூப்பகோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலது புறத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக்கோவில். கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் செல்லும் சாலையில் உள்ள அசூரிலிருந்தும் இவ்வூருக்குச் செல்லலாம்.
சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் பின்னர் 1500 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம சோழன் என்ற மன்னனால் புனரமைக்கப்பட்டதாக வரலாறு. ‘இன்னம்பர் நாடு’ என்பது சோழமண்டலத்தில் காவிரிக்கு வடகரையில் இருந்த நாடுகளில் ஒன்றாகும். இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
திருநாவுக்கரசு சுவாமிகள் தமது க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் ‘இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் கயிலாயநாதனையே காணலாமே’ என்று பாடியுள்ளார். எனவே இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற வைப்பு தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. மேலும் இவ்வாலயம் நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், கடுக்கண் தியாகராஜ தேசிகர் மற்றும் அருணகிரி நாதரால் பாடல் பெற்றது. தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசத்தில் இக்கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கிய ஆலயத்தின் நுழைவாயிலில் உள்ளே வரும் பொழுது பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றை தரிசிக்கலாம். அதன் இடதுபுறத்தில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலில் ராஜ கோபுரமும் கொடி மரமும் இல்லை. அதைத் தொடர்ந்து மூலவரை நோக்கி செல்ல நெடிய மண்டபம் ஒன்று பல தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தின் வலது புறத்தில் நவகிரகங்களுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் தீர்த்தம் சரவணப்பொய்கை மற்றும் கஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் வழிபட ஏற்படுத்திய தடாகமே சரவண பொய்கை என்று அழைக்கப்படுகின்றது.
கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையில் கைதேர்ந்த மந்தகன் என்ற அந்தணர், ஒரு கரடியின் சடலத்தில் நுழைந்து திரியலானார்.
சிவபெருமான் முருகனிடம் கொடுத்த அஸ்திரம் எய்தப்பட்டு விழுந்த கிணறு கஜ தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. இவ்வாலயத்தின் தலவிருட்சம் நெல்லி மரம்.
மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் ஸ்ரீ நர்த்தன விநாயகர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோரது சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் புறப்பட்ட போது, தனது பெற்றோர்களையும் விநாயகரையும் வணங்க விரும்பினார். அப்போது, ஸ்ரீ சங்கரநாயகி மற்றும் ஸ்ரீ கந்தநாதசுவாமியாக சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார். மூலவர் சன்னதியின் வலது புறத்தில் அம்பாள் ஸ்ரீ சங்கர நாயகி தெற்கு நோக்கி எழுந்தருளி நின்ற கோலத்தில் அபய வராத ஹஸ்தத்துடன் அருள் பாலித்து வருகிறார். அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் அன்னை ஸ்ரீ சங்கரநாயகியிடம் வேண்டி வேல் பெற்ற தலம் இத்தலமாகும். இவ்வாலயத்தின் மூலவர் ஸ்ரீ கந்தநாத சுவாமி கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலின் பிரகாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சபை விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் முருகப்பெருமான் ஸ்ரீ ஆதி சுவாமிநாத சுவாமியாக நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். வழக்கமாக முருகன் சன்னதி முன் இடும்பன் சிலை அமைக்கப்பட்டு இருக்கும். இக்கோவில் இடும்பனுக்கு முன்னாள் தோன்றியதால் ஒரு புறம் ஸ்ரீ விநாயகரும் மறுபுறம் ஸ்ரீ அகத்தியர் முருகனை நோக்கி தவம் செய்யும் கோலத்தில் ஒரு கையில் சின் முத்திரையும் மற்றோரு கையில் ஓலை சுவடிகளுடன் காட்சி தருகிறார்.
அதை அடுத்து ஸ்ரீ கஜலட்சுமிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பிரகாரத்தில் சிவலிங்கம், ஸ்ரீ மகாலிங்கம், ஸ்ரீ சூரியன், ஸ்ரீ பைரவர் மற்றும் ஸ்ரீ நாக கன்னி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவில் ஸ்ரீ சங்கர நாயகி அம்பாளிடம் வேல் பெற்று கந்தன் சூரசம்காரத்திற்கு செல்லும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. வேல் வழங்கிய தலம் ஆதலால் இக்கோவிலில் சம்ஹாரம் நடைபெற நிகழ்ச்சி நடைபெறாது.
இக்கோவிலின் முக்கிய பிரார்த்தனையாக சஷ்டி விரதம் இருந்து அர்ச்சனை செய்து தல விருச்சமான நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட குழந்தைப்பேறு பெற்று இன்புறுவர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் இங்குள்ள இறைவனை வழிபட்டால் திருமண தடை, எமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்!