கும்பகோணம் | இன்னம்பூர் | ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள், ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் உடனாகிய ஸ்ரீ எழுத்தறிநாத சுவாமி ஆலயம் | வழிபாடு #7 | திருவையாறு
Kumbakonam | Innambur | Sri Ezhuthari Nathar Temple (Thiru Innambur) Temple | Vazhipadu #7 | Thiruvaiyaru
தேதி : 11.11.2024
நடை திறக்கப்படும் நேரம் :
காலை : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும்,
மாலை : மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
#Kumbakonam #Innambur #Ezhutharinathar #vazhipadu #திருவையாறு #வழிபாடு #கும்பகோணம் #இன்னம்பூர் #நித்தியகல்யாணி #குந்தளாம்பிகை #எழுத்தறிநாதசுவாமி #வழிபாடு #thanjavur #தஞ்சாவூர்
Google Map Location : https://maps.app.goo.gl/s8w4Mr35pk9wgynAA
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள இன்னம்பூர் ஸ்ரீ நித்தியகல்யாணி அம்பாள், ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் உடனாகிய ஸ்ரீ எழுத்தறிநாத சுவாமி ஆலயம். இவ்வாலயத்தை பற்றிய முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.
இக்கோவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் புளியஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலது புறத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதைக் குறிப்பிடும் வகையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் சோழ மன்னர் ராஜகேசரி வர்மன் மற்றும் விஜயநகர மன்னர் வீர கம்பண்ண உடையார் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இத்தலம் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்று, தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 45 ஆவது தலமாகவும், தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 45 ஆவது தலமாகவும் விளங்குகிறது.
ஐந்து நிலை ராஜகோபுரத்தில் துவார பாலகர்களுடன் அமைக்க பெற்றுள்ள இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் விநாயகர் சன்னதி, பலிபீடம், நந்தி பகவான் அமைக்கப்பட்டுள்ளது. சூரியன் வந்து வழிபட நந்தி பகவானும் விநாயகரும் தடையாக இருந்ததால் சூரிய பகவானின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் ஒதுங்கி வழிவிட்டதாக கூறப்படுகிறது. இதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் விநாயகரும் நந்தி பகவானும் மூலவர் நுழைவாயிலில் இருந்து சற்று விலகி இருப்பதை காண முடிகிறது. நந்தி மண்டபத்தின் இடதுபுறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலய மணியானது 100 வருடத்திற்கு மேல் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. நந்தி மண்டபத்திற்கு வலது புறத்தில் ஸ்ரீ சுகுந்த குந்தளாம்பிகை அம்பாள் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பூங்கொம்பு நாயகி என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அம்பாள் தபசு கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
இக்கோவிலில் ஸ்ரீ திருஞானசம்பந்தர், ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ சுந்தரர், ஸ்ரீ மாணிக்கவாசகர் உள்ளிட்ட நால்வர் சன்னதியும், ஸ்ரீ கன்னிமூல கணபதிக்கு தனி சன்னதியும், அதை அடுத்து, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஸ்ரீ சிவலிங்கம், ஸ்ரீ தென் கைலாய லிங்கம், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ மகாலிங்கம், ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ ஜேஷ்டா தேவி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன் அருகில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேதராக ஸ்ரீ நடராஜர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சண்டிகேஸ்வரருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தின் மூலவர் ஸ்ரீ எழுத்தறிநாத சுவாமி. முன்னொரு காலத்தில் சுதன்ம சிவாச்சாரியார் என்கின்ற ஆதிசைவர் ஒருவர் இவ்வாலயத்திற்கு தினசரி பூஜை செய்தும் கணக்கராகவும் பணியாற்றி வந்தார். அதனால் இங்குள்ள இறைவன் எழுத்தறிநாதர் என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ அகத்திய முனிவருக்கு இங்குள்ள இறைவன் தமிழ் இலக்கணம் உபதேசம் செய்ததால் ஸ்ரீ அட்சரபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை சூரிய பூஜை நடைபெறுகின்றது அதாவது உத்தராயண புண்ணிய காலத்தில் பங்குனி 13, 14, 15 ஆகிய தேதிகளிலும், தட்சிணாயண புண்ணிய காலத்தில் ஆவணி 31 புரட்டாசி 1, 2 ஆகிய தேதிகளிலும் சூரிய பூஜை நடைபெறுகின்றது.
இக்கோவிலின் முக்கிய பிரார்த்தனையாக குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வர மற்றும் கல்வி வளம் பெறுக இத்தல இறைவனுக்கு அந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேனை கொண்டு பூ காம்பினால் அல்லது நெல் மணியால் நாவில் அட்சரம் எழுதி, ஆலயத்தை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்ய குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. திருமண தடை நீங்க ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ நித்திய கல்யாணி அம்பாளுக்கு ஆண்கள் 60 மஞ்சள் கிழங்குகளும், பெண்கள் 61 மஞ்சள் கிழங்குகளும் வைத்து அர்ச்சனை செய்து வழிபட விரைவில் திருமணம் கைகூடும். மேலும் இவ்வாலயத்தில் பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று மர கன்றுகள் வாங்கி வைத்து தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, நவராத்திரி விழா, ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், திருவாதிரை தரிசனம், சிவராத்திரி விழா, பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுகின்றது. மாதம்தோறும் பிரதோஷ தினத்தன்று இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது
இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்!